ஏழுவர் விடுதலையே முதல்வரின் லட்சியம்.. அமைச்சர் ரகுபதி

by Editor / 17-10-2021 09:08:49pm
ஏழுவர் விடுதலையே முதல்வரின் லட்சியம்.. அமைச்சர் ரகுபதி

திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதல்வர் லட்சியமாகக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.இது குறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், "1517 தண்டனை பெற்ற சிறைவாசிகள் திருச்சி மத்தியச் சிறையில் உள்ளனர். ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறைச்சாலை, அடுத்தபடியாக நமது திருச்சி சிறைச்சாலை இங்குப் படித்துச் செல்வோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதே போல் சிறைவாசிகள் 10,12 போன்ற வகுப்புகள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கல்லூரி படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது.

சிறையில் உள்ள கைதிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் எந்த சிகிச்சையும் மறுக்கப்படவில்லை. சிறை கைதிகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு உள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் தண்டனை காலம் முடிந்தும் யாரையும் தங்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. பாஸ்போர்ட், வெளி நாடுகளுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும் போன்ற காரணங்களால் தான் அவர்கள் இங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் வெடிகுண்டு வழக்கு, தேசத்துரோக வழக்கு, கொடும் குற்றம் செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. இப்படி அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இது போன்ற குற்றங்களைப் புரிந்தவர்களை தவிர்த்து விட்டு பட்டியலைத் தயாரித்து வருகிறோம். இந்த பணிய முடிய 20 நாட்கள் வரை ஆகலாம்.

ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார். அதை அவரது லட்சியமாக வைத்துள்ளார். அவர்களை விடுதலை செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த எடுத்து வருகிறது. ஏழு பேரில் ரவிசந்திரன் என்பவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

 

Tags :

Share via