ஆளுநர் பெயரில்போலி இமெயில். போலீசில் புகார்

by Editor / 17-10-2021 09:12:50pm
ஆளுநர்  பெயரில்போலி இமெயில். போலீசில் புகார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இமெயில் கணக்கு உருவாக்கி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை அனுப்புவதாக புகார் வந்துள்ளது. இப்படி ஆளுநர் பெயரில் போலி இமெயிலை உருவாக்கியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை போலீசில் புகார் அளித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்டவர் ஆவார். இவரது முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்த ஆர்என் ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கேரளாவிலும் பின்னர் மத்திய அரசு பணியிலும் பணியாற்றினார். அதாவது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்து இருக்கிறார்.

2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றி உள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி கடந்த மாதம் தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் சந்தித்து பேசினார். இதேபோல் தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபுவும் பேசினார். அதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார்கள்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். ஊட்டியில் தங்கி உள்ள அவர், மலை ரயிலில் பயணித்தார். ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டார். குடும்பத்துடன் இன்னும் நான்கு நாட்கள் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இமெயில் கணக்கு உருவாக்கி ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் பலருக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, இப்படி ஆளுநர் பெயரில் போலி இமெயிலை உருவாக்கியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.அத்துடன் பொதுமக்கள் ஆளுநர் பெயரில் வரும் மெயில்களை நம்ப வேண்டாம் என்று ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. ஆளுநரின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரி ( govtam@nic.in ) மற்றும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் @rajbhaven_tn இவை தான் என்று ராஜ்பவன் கூறியுள்ளது. ஆளுநர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இமெயில் மற்றும் ட்விட்டர் பக்ககங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via