சபரிமலையில் தினமும் படி பூஜை

by Editor / 27-11-2021 05:33:21pm
சபரிமலையில் தினமும் படி பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை வழக்கமாக மாத பூஜை நாட்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுபட்ட முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கான படி பூஜை தற்போது சீசனையொட்டி தினமும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via