தினம் ஒரு திருப்புகழ் பதிவில் இன்று ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் திருப்புகழ் பதிகம்.

by Admin / 27-06-2021 04:00:43pm
தினம் ஒரு திருப்புகழ் பதிவில் இன்று ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய  திருச்செந்தூர் திருப்புகழ் பதிகம்.

தினம் ஒரு திருப்புகழ் பதிவில் இன்று ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய  திருச்செந்தூர்
திருப்புகழ் பதிகம்.

எமன் வருகின்ற நேரத்தில், “இவன் நமது அன்பன்”
என்று சொல்ல மயில்மிசை வரவேணும்

"தந்த பசிதனை"

பாடல் வரிகள்:

தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

பொழிப்புரை:
மலையரசனாகிய இமவானது புதல்வியாரென அவதரித்த பார்வதிதேவியின் சிந்தை மகிழ, இரு தனங்களினின்றும் பெருகும் ஞானப் பாலை உண்டருளிய வேல்வீரரே!

சந்திரன், அரவு, கங்காநதி இவைகள் நெருங்கியுள்ள சடை முடியுடைய சிவபெருமானது திருக்குமாரரே!

திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமையிற் சிறந்தவரே!

வருத்தத்தைத் தந்த பசியினது குறிப்பைக் குறிப்பாலுணர்ந்து முலைப்பாலைத் தந்து, மகவின்மீதுள்ள முடிவில்லாத அன்பின் பெருக்கால் பலகாலும் முதுகைத் தடவிய தாயார், தம்பி, ஏவல்செய்யும் பணியாளர், அன்புடைய தங்கை, மருகர்,
உயிரையொத்த மைந்தர்,  மனைவியர்,
சுற்றத்தார், முதலியோர் அவரவர்கள் உடலுக்கு வேண்டிய கடமைகளைச் செய்வர். அவர்கள் அழகிய உபசார வார்த்தைகளைக் கூறுவதெல்லாம் ஒழியுமாறு வந்து, தலைமயிர் அவிழ்ந்து தரையிற் புரளுமாறு மயங்க, ஒரு எருமைக் கிடாவின்மீது ஏறி, அந்தகன் என்னை நெருங்கி வருகின்ற காலத்தில் ’பயப்படாதே’ என்று சொல்லி எனக்கு அபயங்கொடுக்க அந்தக் கூற்றுவனிடத்தில்”இவன் நமது அன்பன்” என மொழிவதற்காக (யான் மயங்கியுள்ளதால் அழைக்காதிருக்கினும்) வலிய மயில்வானத்தின்மீது வந்தருள வேண்டும்.

 

 

Tags :

Share via