ஆந்திராவிலும் களமிறங்கும் பிஆர்எஸ் கட்சி

by Staff / 02-01-2023 12:57:13pm
ஆந்திராவிலும் களமிறங்கும் பிஆர்எஸ் கட்சி

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (TRS ) பாரத் ராஷ்டிர சமிதி (BRS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முனைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளார்.அண்டை மாநிலங்களிலும் கால் பதித்து ஆந்திராவிலும் கட்சியை வளர்க்க திட்டம் தீட்டியுள்ளார்.

அரசியல்வாதிகளுடன், முன்னாள் அதிகாரிகளும் இதில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட உள்ளனர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தோட்டா சந்திரசேகர், ஆந்திர முன்னாள் அமைச்சர், முன்னாள் ஐஆர்டிஎஸ் அதிகாரி ரவேலா கிஷோர்பாபு, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பார்த்தசாரதி, அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த தும்மலஷெட்டி ஜெயபிரகாஷ் பிரகாஷ் உள்ளிட்ட பலர் திங்கள்கிழமை முதல்வர் கே.சி.ஆர் முன்னிலையில் கட்சி பணிகளை தொடங்க ஆயத்தம் ஆகியுள்ளனர்.

மேலும், பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் விரைவில் ஆந்திராவுக்கு வரவுள்ளார். கட்சியை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். BRS AP கிளை அலுவலகம் விரைவில் அமைக்கப்படும். ஆந்திராவில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய அக்கட்சி தயாராகி வருகிறது. விஜயவாடா அல்லது குண்டூரில் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் கேசிஆர் விசாகப்பட்டினம் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆந்திராவில் இருந்து பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, தெலங்கானா என்ற மாநிலத்தை உருவாக்கியவர் முதல்வர் சந்திரசேகர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் தற்போது, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் அரசியல் செய்து வருகிறது. 2024ஆம் ஆண்டு ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இப்போதே கட்சியை வளர்க்கும் பணியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via