காய்ச்சல் இருந்தால் அலட்சியம் வேண்டாம்- அதிகாரி வேண்டுகோள்.

by Staff / 03-01-2023 01:23:10pm
காய்ச்சல் இருந்தால் அலட்சியம் வேண்டாம்- அதிகாரி வேண்டுகோள்.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யும்படி விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பனிக்காலம் என்பதால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நாகர்கோவில் மாநகர மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று மாநகர் நல அதிகாரி ராம்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: -நாகர்கோவில் மாநகர பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் காய்ச்சல் பாதிப்பு யாருக்காது இருக்கிறதா என்ற புள்ளி விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். இந்த பணியில் 328 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்கு 50 வீடுகளை ஆய்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வருபவர்களை வீட்டு தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதிக்கு இதுவரை யாரும் வரவில்லை. அவ்வாறு யாரேனும் வந்தால் உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுபவர்களுக்கு டெங்கு பரிசோதனை மட்டும் எடுக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனை எடுக்கவில்லை. அரசு உத்தரவிடும் பட்சத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் வரை டெங்கு பாதிப்பு ஏதும் இல்லை. குமரி மாவட்டத்தில் இரவில் அதிக பனி பொழிவு இருக்கிறது. இதனால் பனி சம்பந்தமாக காய்ச்சல், சளி வரக்கூடும். எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா தற்போது பரவி வருவதால் இந்த காலகட்டத்தில் காய்ச்சல், சளி பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பனி சீசனில் கொரோனா தொற்று பரவினால் கடுமையாக இருக்கும். அதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குமரி மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட தடுப்பூசியை 14 லட்சத்து 1, 651 பேரும், 2-வது கட்ட தடுப்பூசியை 11 லட்சத்து 87 ஆயிரத்து 264 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 9 ஆயிரத்து 96 பேருக்கும் செலுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via