காட்டு யானை மிதித்து தோப்பு காவலாளி பலி.

by Editor / 05-05-2023 11:17:31pm
காட்டு யானை மிதித்து தோப்பு காவலாளி பலி.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காட்டு யானை மிதித்து தோப்பு காவலாளி பரிதாபமாக இறந்தார்.பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் ( 73). இவருக்குச் சொந்தமான தோப்பு தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வனப்பேச்சி கோவில் அருகில் உள்ளது. இத்தோப்பில் தென்னை, கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வீரகாளை ( 50) என்பவர் காவலாளியாக கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்பத்துடன் தேவிபட்டணம் ஜீவா நகரில் வசித்து வந்தார்.இரவு நேரத்தில் தோப்பிற்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை, கொய்யா மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் காட்டு யானைகள் இரவு நேரத்தில் தோப்புக்குள் புகுந்தால் அவற்றை விரட்டுவதற்காக வீரகாளை இரவு நேரம் தோப்பில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு  வீரகாளை தோப்பில் தங்கியிருந்த போது காட்டு யானைகள் அங்கு வந்துள்ளன. அவற்றை விரட்டும் பணியில் வீரகாளை ஈடுபட்டுள்ளார். காட்டு யானைகளை அவர் விரட்டிச் சென்ற போது ஞானபிரகாசம் என்பவரின் தோப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று எதிர் தாக்குதல் நடத்தி வீரகாளையை மிதித்து கொன்றுள்ளது.
இன்று தோப்பு பகுதிக்குச் சென்றவர்கள் வீரகாளை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறை மற்றும் சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ரேஞ்சர் மவுனிகா, வனவர் அசோக்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகச்சாமி மற்றும் வீஏஒஅன்புசெல்வி,தனிபிரிவு ஏட்டு கருப்பசாமி,போலீசார் விரைந்து சென்று வீரகாளை உடலை மீட்டனர். மீட்கப்பட்ட வீரகாளை உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை மிதித்து இறந்த வீரகாளைக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். யானை மிதித்து வீரகாளை இறந்தது சிவகிரி பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானைகள் மலைஅடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும், இறந்த வீரகாளை குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via