பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான  சூழலை உருவாக்க முதல்வர் வேண்டுகோள் 

by Editor / 17-07-2021 08:45:00pm
பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான  சூழலை உருவாக்க முதல்வர் வேண்டுகோள் 



பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்வர், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

Tags :

Share via