திருமணமான பெண்களிடம் ஃபேஸ்புக்கில் பழகி மோசடி - இளைஞர் கைது

by Editor / 25-09-2021 10:38:21am
திருமணமான பெண்களிடம் ஃபேஸ்புக்கில் பழகி மோசடி - இளைஞர் கைது

கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி நகை மற்றும் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஃபேஸ்புக் மூலம் தனக்கு அறிமுகமான நபர், தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபர் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், விசாரித்ததில் மாணவியிடம் இருந்து சுமார் 17 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 13.5 சவரன் நகையை பறித்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட லோகேஷின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் நிஷாந்த் மற்றும் விமலேஷ் என்ற பொய்யான பெயர்களில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களையும், புதுச்சேரி மற்றும் மலேசியா வாழ் பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. லோகேஷிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து லோகேஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via