முதல்வர் தலைமையில்  புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு

by Editor / 08-10-2021 05:53:37pm
முதல்வர் தலைமையில்  புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு


மத்திய அரசு பால்வேறு திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் திட்டங்கள் நாடுமுழுவதும் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தபடுவதை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது.


இந்நிலையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழக அரசின் சார்பில் முதல்வர்  தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் இதன் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும், மக்களவை உறுப்பினர்களான திருநாவுக்கரசர், டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், செல்வராஜ், நடராஜன், ரவீந்திரநாத் குமார், நவாஸ்கனி, தொல்.திருமாவளவன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல மாநில அரசின் பரிந்துரையின் பேரில் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், பூமிநாதன், ஜி.எம்.எச். ஹஸன் மௌலானா மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via