ஐபிஎல்: அடுத்தடுத்து மூன்று பவுண்டரி  அடித்து வெற்றிக்கு வித்திட்ட டோனி.

by Editor / 11-10-2021 03:47:39pm
ஐபிஎல்: அடுத்தடுத்து மூன்று பவுண்டரி  அடித்து வெற்றிக்கு வித்திட்ட டோனி.


ஐபிஎல் ல் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை தோற்கடித்து சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


14-வது ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் முதல் -4 இடங்களை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லி சென்னை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.


முதலில் டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிரிதிவி ஷா மற்றும் தவான் களமிறங்கினர். 7 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னிலும் ஆக்ஸார் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் பிரிதிவி ஷாவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரிதிவி ஷா அவுட் ஆனார். இறுதியில் ரிஷப் பண்ட்- ஹெட்மயர் (37) ஜோடி அதிரடியாக ஆடி அணி யின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.


173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை சென்னை அணி தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர் டு ப்ளஸ்ஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற, பின்னர் ருதுராஜுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்த நிலையில் ராபின் உத்தப்பா 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.
பின்னர் வந்த தாக்கூரும் (0), ராயுடுவும் (1) அடுத்தடுத்து வெளி யேறியதால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. முதலில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் பின்னர் அதிரடி காட்டி 70 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்ஆனார்.


கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் மொயீன் அலி (16) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது மற்றும் 3வது பந்தில் டோனி பவுண்டரி அடித்தார். 4-வது பந்தில் டோனி பந்தை அடிக்க முயற்சிக்க வைடாக வீசப்பட்டு ஒரு ரன் கிடைத்தது.


4-வது பந்து மீண்டும் வீசப்பட்ட போது, தனக்கே உரிய ஸ்டைலில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை டோனி முடித்து வைத்தார். இரண்டு பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் 173 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக ஐ.பி.எல் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி சிறப்பாக ஆடி சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என விராட் கோலி பாராட்டியுள்ளார்.


இதுதொடர்பாக கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அரசன் திரும்ப வந்துவிட்டார். ஆட்டத்தில் மிகச்சிறந்த பினிஷர். மீண்டும் ஒருமுறை நான் என்னுடைய இருக்கையில் இருந்து துள்ளிக்குதித்தேன் டோனி" என்று குறிப்பிட்டுள்ளார்.இன்றைய எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

 

Tags :

Share via