தமிழகம் முழுவதும் ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

by Editor / 14-12-2021 02:24:24pm
தமிழகம் முழுவதும் ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தியாவிலேயே முதல் முறையாக கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது.
 
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக திருத்தணி பட்டாபிராமபுரம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி.என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருத்தணி சென்றிருந்தார். அவரை அமைச்சர்கள் பெரிய கருப்பன், ஆவடி சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வரவேற்றனர். அதன்பிறகு விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சுய உதவிக்குழுவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த விழாவில் 1,730 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்கினார்.

சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் சுய உதவிக்குழுவில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் மற்றும் பிற திட்ட உதவிகள் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52 ஆயிரத்து 574 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 6 லட்சத்து 83 ஆயிரத்து 462 பயனாளிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.2,485.96 கோடி வங்கிக் கடன் மற்றும் 30 இ-சேவை மையங்கள் தொடங்குவதற்காக 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய தொழில் தொடங்க தொழிற்கடனாக நகர்ப்புறத்தைச் சேர்ந்த 931 குழுக்களுக்கு ரு.26.60 கோடி, 1,381 தனி நபர்களுக்கு ரு.16.09 கோடி, 4,702 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 57,451 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட வங்கி கடனாக ரூ.219.37 கோடியும் வழங்கப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில் திறன், அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை பெற்றுத்தர முதல் கட்டமாக 69 சமுதாயத் திறன் பள்ளிகள் தொடங்க ரூ.66 லட்சம் வழங்கப்பட்டது.

உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளும், வருமானத்தை பெருக்கிடும் பயிற்சிகளும் வழங்க 37 சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்க ரூ.26 லட்சம், உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்க தொடக்க நிதியாக 90 குழுக்களுக்கு ரூ.68 லட்சம் மற்றும் தொழிற்குழுக்களுக்கான தொடக்க நிதியாக 37 குழுக்களுக்கு ரூ.26 லட்சமும் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை போலவே தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர் தா. மோ.அன்பரசன் கழல் நிதி வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், ஏழிலரசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சர் தா.மோஅன்பரசன் பங்கேற்று மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். காணொலி வாயிலாக நிகழ்ச் சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via