வங்கி கொள்ளையைத்தடுக்க பணியாளர்களின் பட்டியல் சேகரிக்க காவல்துறை முடிவு.

by Editor / 20-08-2022 09:24:43am
வங்கி கொள்ளையைத்தடுக்க பணியாளர்களின் பட்டியல் சேகரிக்க காவல்துறை முடிவு.

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை விவகாரம் தொடர்பாகப் பெருநகர சென்னை  வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார், இணை ஆணையர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது பேசிய பெருநகர சென்னை  வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர்  அன்பு ஐபிஎஸ், கடந்த 13-ஆம் தேதி அரும்பாக்கம் பெட் வங்கி கொள்ளை அனைவருக்கும் தெரியும். அப்போது நாம் இரண்டு பேரைக் கைது செய்திருந்தோம். 18 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், முருகன், செந்தில், சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முருகன் மற்றும் செந்தில் நேரடியாகக் கைது செய்யப்பட்டனர். 31.7 கிலோ கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. மற்றொரு குற்றவாளி ஶ்ரீவதசன் கோவையிலிருந்து அழைத்து வரப்படுகிறார். ஏற்கனவே சொன்னது போலத் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகிறோம் எனக் கூறினார். மேலும், முக்கியமாக 18 கிலோ மொத்தமாக சீல்டு கவர் கொண்டு 15.9 கிலோ கவர் எடை தவிர்த்துக் கணக்கிடப்பட்டது. மீதம் உள்ளவற்றை நாம் பறிமுதல் செய்ததில் இப்போது 31.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சந்தோஷ் எனும் குற்றவாளி அவரது உறவினர் காவல் ஆய்வாளர் வீட்டில் கையில் கொண்டு போன நகையை வைத்துவிட்டுச் சென்றுள்ளார் எனத் தெரிவித்த அவர், மீதமுள்ள 6.5 கிலோ அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் இல்லத்திலிருந்து எடுக்கப்பட்ட நகை கொண்டு, அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். மேலும், அந்த நகையை சந்தோஷ் ஆய்வாளர் வீட்டில் கொடுத்து வந்தது மூன்று நாட்களுக்கு பிறகுதான் தெரிய வந்தது எனக் குறிப்பிட்ட அவர், இன்றைய விசாரணை அடிப்படையில் ஆய்வாளரைக் கைது செய்துள்ளோம் எனக் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், சென்னை காவல்துறை முழு மூச்சாக இதில் யார் யாருக்குச் சம்பந்தம் உள்ளது என விசாரித்து வருவதாகவும், காவல் ஆய்வாளர் அமல் ராஜ் கொள்ளையடிக்கப்பட்ட நகை என்பது தெரிந்தும் மூன்று நாட்கள் வைத்திருந்தது தவறு எனக் கூறினார். மேலும், விசாரணை அடிப்படையில் அமல்ராஜ் எந்த விதமான சம்பவங்களிலும் ஈடுபடவில்லை எனத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மொத்தமாக உருக்க வேண்டும் என ஒரு இயந்திரம் வாங்கி உள்ளனர். அந்த இயந்திரத்தை வாங்க உதவியாக இருந்தவர் ஸ்ரீவட்சன் எனக் கூறிய அவர், அதில் தான் அவர் சம்மந்தப்பட்டுள்ளார் எனக் கூறினார்.

சூர்யா, சந்தோஷ், அமல்ராஜ், ஸ்ரீவட்சன், முருகன் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அவர், பணத்தேவைக்காக இப்படிச் செய்து இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காகக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறினார். மேலும், முகம் தெரிந்த நபர் ஒருவர் என்பதால் விரைவில் அனைவரையும் கண்டுபிடிக்க முடிந்தது எனக் கூறிய அவர், வேறு துப்பு கிடைக்காததின் அடிப்படையில் நெருங்கிய நபர்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதால் அவர்கள் பிடிபட்டனர் எனக் கூறினார்.


இந்த விஷயத்தில், காவல் ஆய்வாளர் மனைவிக்கும் எந்த மாதிரியான புரிதல் இருக்கும் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர், RBI coordination மூலமாக அலாரம் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால், அன்றைய தேதிக்கு முருகன் அங்கே பணிபுரிந்ததால் மட்டுமே அவரால் அலாரம் அணைக்கப்பட்டு இதில் செயல்பட்டு உள்ளார். வரும் காலங்களில் வங்கியில் பணிபுரியும் ஒவ்வொருவருடைய பின்புலமும் இனி விசாரித்து ஒவ்வொருவரையும் பணியமர்த்த அறிவுறுத்தி உள்ளோம் எனக் கூறினார். மேலும், தற்போது மீட்கப்பட்ட 31.7 கிலோ நகைகளை வங்கி ஊழியர்கள் சரிபார்த்து வருகின்றனர். விரைவில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து வங்கி நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.


 

 

Tags :

Share via