நீதி விசாரணைக்கு இந்நாள் முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி

by Editor / 28-11-2022 07:57:47am
நீதி விசாரணைக்கு இந்நாள் முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாங்கள் குரல் கொடுத்தபோது வாய்மூடி மவுனமாக இருந்தவர் ரங்கசாமி. இப்போது மாநில அந்தஸ்து வேண்டும் என்றும், கிடைக்கவில்லை என்றால் நிர்வாகம் சீராக நடக்காது என்று சொல்கிறார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற எண்ணம் ரங்கசாமிக்கு இருந்தால், 3 மாதத்திற்குள் மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியே வருவேன் என கூற ரங்கசாமிக்கு தைரியம் இருக்கிறதா? அவரது செயல்பாடால் புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அதை மறைக்க மாநில அந்தஸ்து வேண்டும் என்று நாடகமாடுகிறார்.

புதுச்சேரியில் குப்பை அள்ளுவதற்காக, 19 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள ரூ.900 கோடி டெண்டரில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த துறை சார்ந்த அமைச்சர் சாய் சரவணன், தனக்கு தெரியாமல் இந்த கோப்பு அனுப்பியுள்ளதாக, இந்த டெண்டர் குறித்து புகார் தெரிவிக்கிறார். இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என தலைமை செயலாளருக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர் சாய் சரவணண் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் முறைகேடு நடந்துள்ளது. மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆகவே இந்த ஊழல் தொடர்பாக நீதி விசாரணைக்கு ரங்கசாமி தயாரா?

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஊழல் இல்லை என பாஜக கூற முடியுமா? ரங்கசாமி அரசின் மீது பாஜக அமைச்சர், ஊழல் புகார் கூறுவதை புதுச்சேரி பாஜக தலைமை வேடிக்கை பார்க்குமா?“ என நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

Tags :

Share via