ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை.

by Staff / 17-12-2022 05:28:15pm
 ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை.

கன்னியாகுமரி மகாதானபுரம் நேதாஜி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 54). இவர், கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாமிநாதன் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார். இரவு அவர் வீட்டுக்கு வர வில்லை. இதையடுத்து அவரது மனைவி மற்றும் மகன்கள் சாமிநாதனை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சுவாமிநாதன் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூக்கில் தொங்குவதாக ரெயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாமிநாதனின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
சாமிநாதன் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தூக்கில் தொங்கிய சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாமிநாதன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி. சி. டி. வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட சாமிநாதன் நேற்று இரவு 9 மணிக்கு ரெயில் நிலையத்திற்குள் வருவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து அவர் ரெயில்வே தண்டவாளத்தை நோக்கி செல்கிறார். பின்னர் அவர் நிறுத்தப்பட்டிருந்த ரெயிலின் ஜன்னலில் வெளிப்புறமாக தூக்கில் தொங்குவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் சாமிநாதன் கடந்த 12-ந்தேதி முதல் பணிக்கு வரவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பப் பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே ஊழியர் ரெயில் பெட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via