மிஸ்ஸான ஏ.டி.எம். அட்டை..புஸ்ஸான ..74 ஆயிரம்.. ரூபாய்..அடப்பாவிகளா..

by Editor / 26-03-2023 04:19:24am
மிஸ்ஸான ஏ.டி.எம். அட்டை..புஸ்ஸான ..74 ஆயிரம்.. ரூபாய்..அடப்பாவிகளா..


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாறைப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் சீனிவாசன்.இவர் தனியார் மினி பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் கோவில்பட்டியில்வீட்டுக்குத்தேவையான சில பொருள்களை வாங்க சென்ற போது தனது சட்டை பையில் வைத்திருந்த ஏ.டி.எம்.அட்டை தவறவிட்டுள்ளார்நேற்றுமுன்தினம்  இரவு வீட்டில் சென்று பார்த்த போது தான் தனது ஐ.ஓ.பி வங்கி ஏ.டி.எம் அட்டை காணமால் போய் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த அட்டையின் பின்புறம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஏ.டி.எம்.அட்டையின் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்துள்ளார். இதையெடுத்து காலையில் சென்று வங்கியில் புகார் தெரிவிக்கலாம் என்று இருந்த நிலையில்,25.ஆம் தேதி காலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து 74 ஆயிர ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போன் எண்ணிற்கு தகவல் வந்ததும் அதிர்ச்சியடைந்தார். கோவில்பட்டியில் உள்ள 3 ஏ.டி.எம் மையத்தில் நேற்று முன் தினம் இரவு தலா 10 ஆயிரம் வீதம்  30 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் வீதம் 34 ஆயிரமும், இன்று காலையில் இளையரசனேந்தலில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் 40 ஆயிரம் என மொத்தமாக 74 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் நடத்துனர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம் மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
வங்கி தொடர்பான ரகசிய எண்களை யாரிடமும் சொல்லக் கூடாது என்று பலமுறை வங்கி நிர்வாகங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில் அட்டையின் பின்புறம் எழுதிய ரகசிய எண் காரணமாக நடத்துனர் ஒருவர் 74 ஆயிர ரூபாய் பணத்தினை இழந்துள்ளார்.

 

Tags :

Share via