வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை: தொடர்ந்து அமலில் இருக்கும்

by Editor / 25-08-2021 03:08:46pm
வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை: தொடர்ந்து அமலில் இருக்கும்

 

தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மருத்துவத் துறை இன்று தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவலை பொறுத்து, அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கவும், இரவு 10 மணிவரை கடைகளை திறந்து வைக்கவும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவும், பார்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஊரடங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இன்று அறிவிப்பு

நேற்று முன் தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய ஊரடங்கில் வழிபாட்டு தலங்கள் பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால், பொதுமக்கள் குழப்பம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு மருத்துவத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,”வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்டவைகளை திறக்க அனுமதியில்லை.

வழிபாட்டு தலங்கள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும். செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதற்கு பின்னரும் கொரோனா தொற்று குறைவாக இருந்தால், வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். தியேட்டர், கடற்கரை திறப்பால் தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via