தமிழகத்தில் நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம்:

by Editor / 25-09-2021 04:07:46pm
தமிழகத்தில் நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம்:


தமிழகத்தில் நாளை நடைபெறும் 3வது மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் டோஸ் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12 ந் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19 ந்தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
3வது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நாளை (26 ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் 3வது மாபெரும் முகாமை பயன்படுத்தி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவை ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை 200 வார்டுகளில், 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்டுட் 26-ந் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், செப்டம்பர் 12 ந் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19ந்தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. அந்தவகையில் சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 25384520, 044 46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories