அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 14 சதவிகித அகவிலைப்படி வழங்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

by Editor / 22-10-2021 04:40:54pm
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு  14 சதவிகித அகவிலைப்படி வழங்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்


மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 14 சதவிகித அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம்‌ வலியுறுத்தி உள்ளார்.


அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்‌ ஓ. பன்னீர்செல்வம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
அரசால்‌ தீட்டப்படும்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவதிலும்‌, அரசின்‌ நலத்‌ திட்ட உதவிகளை மக்களிடம்‌ கொண்டு போய்ச்‌ சேர்ப்பதிலும்‌, இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத்‌ தேவையான மீட்பு, நிவாரணம்‌ மற்றும்‌ மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும்‌, அரசின்‌ வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கும்‌ பொதுச்‌ சேவையை நடைமுறைப்படுத்துவதிலும்‌ அடித்தளமாக விளங்குபவர்கள்‌ அரசுஊழியர்கள்‌.இப்படிப்பட்ட இன்றியமையயப்‌ பணிகளை மேற்கொள்ளும்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்ததால்‌ தான்‌, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும்‌, ஒய்வூதியதாரர்களுக்கும்‌


எப்பொழுதெல்லாம்‌ அகவிலைப்படியை அறிவிக்கின்றதோ அப்பொழுதெல்லாம்‌ அதனை மாநில அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கும்‌ அளித்த அரசு அண்ணா தி.மு.க. அரசு. இது மட்டுமல்லாமல்‌, 15,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஊதியக்‌ குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களின்‌ ஊதியத்தையும்‌ உயர்த்திய அரசு அண்ணா தி.மு.க. அரசு. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்‌ 2011 முதல்‌ 2021 வரையிலான அண்ணா தி.மு.க. ஆட்சியில்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது.


2021 ம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைத்‌ தேர்தலுக்குப்‌ பின்‌ தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ நிலைமை பரிதாபத்திற்குள்ளாகியது. ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல்‌ அளித்தபோது, அதனை மாநில அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல்‌, 1-.4.-2022 முதல்‌ வழங்கப்படும்‌ என்று தி.மு.க. அரசு அறிவித்தது. பின்னர்‌, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ சங்கங்களின்‌ தொடர்‌ வலியுறுத்தலைத்‌ தொடர்ந்து, மூன்று மாதங்கள்‌ முன்னதாக, அதாவது 1-.1.-2022 முதல்‌ வழங்கப்படும்‌ என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.-7.-2021 முதல்‌ மேலும்‌ 3 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது. அதாவது, 1.7.2021 முதல்‌ 31 விழுக்காடு அகவிலைப் படியை மத்திய அரசு ஊழியர்கள்‌ பெறப்‌ போகிறார்கள்‌. ஆனால்‌, மாநில அரசு ஊழியர்கள்‌ 17 விழுக்காடு அகவிலைப்படியைத்‌ தான்‌ பெற்று வருகிறார்கள்‌. மத்திய அரசு ஊழியர்களுக்கும்‌, தமிழ்நாடு அரசு


ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம்‌ 14 விழுக்காடு. இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்‌ என்பதே அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது


எனவே, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளிப்‌ பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல்‌, மாநில அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளிப்‌ பரிசாக உடனே வழங்க முதலமைச்சர்‌ உத்தரவிட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம்‌ கூறியுள்ளார்.

 

Tags :

Share via