யூரியாவை ஹெராயின் என விற்க முயற்சி ரகசிய தகவலின் பேரில் 4 பேர் அதிரடி கைது

by Admin / 04-03-2022 01:42:31pm
யூரியாவை ஹெராயின் என விற்க முயற்சி ரகசிய தகவலின் பேரில் 4 பேர் அதிரடி கைது

சென்னை மாதவரத்தில் போதை பொருள் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கடந்த 28ஆம் தேதி தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திய போது சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்றிருந்த இருவரிடம் விசாரித்த போது, போதை பொருள் போல் இருந்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமீம் அன்சாரி (27) மற்றும் மதுரையை சேர்ந்த முகமது சபி (29) என்பது தெரியவந்தது. மேலும் ஹெராய்ன் என்னும் போதைப் பொருளை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜா (40) மற்றும் அருண்குமார் (31) ஆகியோரிடம் இருந்து பெற்றதாக வாக்குமூலம் அளித்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த முத்துராஜா மற்றும் அருண்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியது.  டிரைவராக உள்ள முத்துராஜா தேவகோட்டையில் தனது நண்பரான மணவாளன் என்பவருடன் சேர்ந்து ஒரு கிலோ யூரியாவை வாங்கி, அதில் சில வேதிப் பொருட்களை சேர்த்து அரைத்து ஹெராய்ன் என்னும் போதை பொருள் போல் தயாரித்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தயாரிக்கப்பட்ட 1 கிலோ போதை பொருளை முத்துராஜா தனக்கு தெரிந்த நண்பரான அருண் குமார் என்பவரிடம் கொடுத்து விற்று கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அருண்குமார் அவருக்கு தெரிந்த நண்பரான தமீம் அன்சாரி மற்றும் முகமது சபி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் உள்ள சையது என்பவர் 15 லட்சம் ரூபாய்க்கு ஹெராயின் என்னும் போதைப் பொருளை வாங்கிக் கொள்வதாக தமீம் மற்றும் முகமது அன்சாரியிடம் தெரிவித்துள்ளார். மேலும் 2 8ஆம் தேதி சென்னை மாதவரத்தில் உள்ள துணிக்கடை அருகே போதைப் பொருளை கொண்டு வருமாறும், மண்ணடியை சேர்ந்த ஜமால் நிவாஸ் என்பவர் பணத்தை கொடுத்துவிட்டு போதைப்பொருளை பெற்றுக் கொள்வார் எனவும் சையது தெரிவித்துள்ளார். பின்பு கடந்த 28ஆம் தேதி போதைப்பொருளை கொடுக்க தமிம் அன்சாரி மற்றும் முகமது சபி ஆகியோர் நின்றிருந்தபோது, போலீசார் கையும் களவுமாக பிடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

முத்துராஜா மீது ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஹெராயின் போதைப்பொருளை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் கடந்த இரண்டு வருடங்களாக ஒரிஜினல் ஹெராயினை கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

யூரியாவை ஹெராயின் போதைப் பொருள் என நம்ப வைத்து மோசடி செய்ய முயன்ற நான்கு பேர் மீதும் மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் பெரியமேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் இதேபோல் இந்த கும்பல் வேறு யாரிடமாவது போதை பொருள் எனக் கூறி மோசடி செய்துள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via