குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டி வரும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

by Editor / 24-01-2023 08:23:36am
குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டி வரும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்த சூழலிலும், நேற்று இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தினால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அருவியின் ஓரமாக நின்று குளித்துக் கொண்டிருந்தனர்.

 மேலும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்யாமல் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் குறைந்த அளவே நீர்வத்து காணப்பட்டு வந்தன.

 குறிப்பாக, இதே நிலை குற்றால அருவிகளில் நீடித்தால் இந்த வருடத்திற்கு கோடைகாலத்தில் தண்ணீர் தேவையே பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவ வாய்ப்புள்ளதாக கூறி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்து வந்த சூழலில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 இதன் மூலமாக குடிநீர் தேவை பற்றாக்குறை நீங்கும் என கூறப்படுகிறது.

மேலும், தற்போது வரை குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் சூழலில் பாதுகாப்பில்லாமல் சுற்றுலா பயணிகள் முதலில் குளித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தற்போது குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via